காதலனை கணவனாக உருமாற்றம் ; பெண்ணின் திட்டமிட்ட சதி .

காதலனுடன் இணைந்து கணவரை கொன்றுவிட்டு, பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம், தனது காதலனை இறந்துபோன கணவன் போல மாற்ற திட்டமிட்ட ஒரு பெண்ணின் சதியை தெலங்கானா போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

நாகர் கர்னூலின் கூடுதல் போலீஸ் கண்காணிப்பாளர் சென்னியா வெளியிட்ட அறிக்கையின்படி, விவரங்கள் இந்த மாதிரிதான் உள்ளன.

தெலங்கானா மாநிலத்தின் நாகர் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த சுதாகர் ரெட்டியை சுவாதி திருமணம் செய்து கொண்டார். காதலன் ராஜேஷை சுவாதி சந்திக்கும் வரை இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தது.

காதல் திருமணம் செய்துகொண்ட சுதாகர் ரெட்டிக்கும் சுவாதிக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளன.
சுதாகர் வியாபாரத்தில் பரபரப்பானதால், தனது வாழ்க்கையில் சுவாதி வெறுமையை உணர்ந்துள்ளார். மேலும், ராஜேஷ் என்ற ஃபிசியோதெரபிஸ்ட் உடனான காதலில் விழுந்தார்.
கடந்த இரண்டு வருடங்களாக ராஜேஷ் உடன் சுவாதி காதலில் இருந்துள்ளார். காதலன் உடனான உறவைத் தொடர, தனது கணவரை கொல்ல சுவாதி முடிவு செய்தார்.
சுவாதியின் இந்த முடிவுக்கு ஆதரவு அளித்த ராஜேஷ், குடும்பத்தைப் பார்த்துக்கொள்வதாக வாக்குறுதி அளித்தார். ராஜேஷை நம்பிய சுவாதி, கணவரைக் கொல்லுவதற்கான திட்டங்களைத் தீட்டினார்.
கடந்த நவம்பர் 26-ம் தேதி தூக்கத்தில் இருந்த சுதாகர் படுக்கையில் இருந்து கீழே விழுந்தார். இதனால் அவரது தலையில் காயம் ஏற்பட்டது.
கணவரின் உறவினர் அரவிந்தை அழைத்த சுவாதி, கணவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல உதவுமாறு கேட்டுள்ளார். அது இரவு நேரம் என்பதால், சுதாகரை மறுநாள் காலை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்துள்ளனர்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, தனது காதலன் ராஜேஷை சுவாதி அழைத்துள்ளார். இதற்கிடையே அரவிந்த வீட்டில் இருந்தால், திட்டத்திற்கு இடைஞ்சலாக இருக்கும் என்பதால் அவரை கிளம்புமாறு சுவாதி கூறியுள்ளார்.
சுவாதியின் வீட்டுக்கு வந்த ராஜேஷ், சுதாகருக்கு மயக்க மருந்து கொடுத்துள்ளார். சுவாதியும், ராஜேஷும் இணைந்து சுதாகரை இரும்பு கம்பியால் அடித்துக் கொன்றுள்ளனர்.
பிறகு, சுதாகரின் உடலை காரில் எடுத்துசென்று காட்டில் எரித்துள்ளனர்.
காதலன் ராஜேஷை, தனது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் கணவன் சுதாகராக காட்ட சுவாதி திட்டமிட்டார். இதனை நிறைவேற்ற, பெட்ரோல் ஊற்றி முகத்தை எரித்துக்கொள்ளுமாறு காதலன் ராஜேஷை கேட்டுள்ளார்.
ராஜேஷின் முகத்திற்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து, தனது கணவரின் முகம் இப்படி மாறிவிட்டது என மற்றவர்களிடம் கூற வேண்டும் என்பது சுவாதியின் எண்ணம்.
உடனே ராஜேஷை மருத்துவமனையில் அனுமதித்த சுவாதி, தனது கணவர் சுதாகர் மீது அமில வீச்சு நடந்தது என்று பின்னர் குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.
அமில வீச்சு குறித்து, சுதாகரின் சகோதரர் போலீஸில் புகார் அளித்துள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் இது குறித்து விசாரித்தார்.
தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவரும் நபர் தனது கணவர் என குடும்பத்தினரையும் உறவினர்களையும் நம்பவைத்தார். மருத்துவ செலவுக்காக சுதாகரின் குடும்பத்தினர் 5 லட்சம் ரூபாய் செலவு செய்தனர்.
டிசம்பர் 9-ம் தேதி சுதாகரின் சகோதரர் மருத்துவனைக்கு சென்றபோது, சிகிச்சை பெற்றுவரும் நபர் தனது சகோதரர் இல்லை என்பதைக் கண்டுபிடித்தார். இது குறித்து உடனடியாக அவர் போலீஸில் புகார் அளித்தார்.
ராஜேஷின் விரல் ரேகைகளை போலீஸார் சோதித்த போது, அது சுவாதியின் கணவர் சுதாகரின் விரல் ரேகையுடன் பொருந்தவில்லை என்பதை கண்டுபிடித்தனர். இதுவே உண்மையை வெளிக்கொண்டுவந்தது.
சுவாதியும் ராஜேஷும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். போலீஸார் சுவாதியை கைது செய்துள்ளனர். ராஜேஷ் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Theme images by mammuth. Powered by Blogger.